எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் மீது அவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றைக் கண்காணிப்பது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், தானாக முன்வந்து வழக்குப் பதிந்து, விசாரணைக்கு எடுத்து, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கும்படி, கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையும் விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தது. மேலும், சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், குற்றம் மற்றும் அவதூறு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாக உயர் நீதிமன்றப் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த சிறப்பு நீதிமன்றங்களில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் மீது இவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாதெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.