Skip to main content

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Published on 02/01/2025 | Edited on 02/01/2025

 

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு  ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருது  வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனுபாக்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவின் குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள ஹர்மன் ப்ரீத் சிங் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக உள்ளார். ஜனவரி 17ஆம் தேதி (17.01.2025) டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார். அதோடு தமிழகத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ, சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸூக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருதையும் வரும் 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நாட்டின் உயரிய விளையாட்டு விருது ஆகும். பாரா தடகள வீரர்களும், பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகள் வழங்கப்படவுள்ளதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துவோம். மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைவார்கள் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “12ஆவது முறையாகத் தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விராங்கணை பவானி தேவியை வாழ்த்தி மகிழ்கிறோம். ஒலிம்பிக் வீராங்கனையான பவானி தேவி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் (ELITE) திட்ட வீரங்கணை என்பது கூடுதல் சிறப்பு. திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம். அவருக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்