Published on 15/07/2018 | Edited on 15/07/2018

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோவை சிறுவாணி அணை இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே புதுப்புது நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுமார் 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 685 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதியன்று நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் மொத்த உயரமான 50 அடி உயரத்தையும் தாண்டி தண்ணீர் வழிந்தது. இதை தொடர்ந்து இன்று மீண்டும் இரண்டவது முறையாக நீர் வழிந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சிறுவானி அணை நிரம்பியுள்ளதால் கோவை மாநகர பகுதிகளுக்கு அடுத்த ஓராண்டிற்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையின் குடிநீர் பயன்பாட்டிற்காக சிறுவானி அணையிலிருந்து தினசரி 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நிரம்பி வழியும் நீர் பாவனி ஆற்றில் கலந்து பில்லூர் அணைக்கு செல்கிறது.