தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடைவிதிக்கபட்டுள்ளது. கன மழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் 2 நாட்களுக்கு வர வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால், குறைந்த அளவே பக்தர்கள் உள்ளனர். முன்னதாக கன மழை எதிரொலியாகத் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இரு நாட்களுக்கு கோயிலுக்கு வர வேண்டாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. நேற்று சுமார் 60 ஆயிரம் கனஅடி வரை சென்ற தண்ணீர், தற்போது குறைந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் குற்றால அருவியில் குறைந்த பெருவெள்ளம். இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க 4வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் 3ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை வனத்துறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானல் வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் 3ஆம் நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.