காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''நான் ஒரு கற்பனை செய்கிறேன். அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் எங்களைப் போன்றவர்களை பார்த்தவுடன் கிண்டல் தான் செய்திருப்பார். அந்த அளவிற்கு ஒரு நேர்மறையாக வெளிப்படையாக பேசக்கூடியவர். என்னை பொறுத்தமட்டில் ஒரு சகோதரியாகத்தான் பாவித்து இருந்தார். என்னைப் பார்த்தால் ஒருமையில் தான் பேசுவார். அந்த அளவிற்கு என்னிடம் உரிமை எடுத்துக் கொள்வார். அந்த அளவிற்கு சின்ன வயதிலிருந்து அறிமுகமான ஒரு தலைவர்.
பெரியாரின் பேரனாக இருந்து பெரியவர் காமராஜரை தழுவி வந்தவர். பெரியாரின் கொள்கையில் இருந்து, குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் இயக்கத்திற்கு காமராஜரை பின்பற்றி வந்தவர். எந்த விமர்சனமாக இருந்தாலும் வெளிப்படையாக கவலைப்படாமல் எடுத்துச் சொல்வார். செயற்கையாக இல்லாமல் இயற்கையாக பேசக்கூடிய ஒரு தலைவர். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.