Skip to main content

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது; கனமழைக்கு வாய்ப்பு!

Published on 15/12/2024 | Edited on 15/12/2024
A new depression forms; Chance of heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “வங்கக்கடலில் இன்று (15.12.2024) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கில் தமிழகம் நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (16.12.2024) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17ஆம் தேதி நாகப்பட்டினம். திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்