Skip to main content

நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்!

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Heavy argument between ADMK and DMK members in the city council meeting!

 

விருத்தாசலம் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில்,   நடந்தது. துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சேகர் வரவேற்றார்.

 

கூட்டத்தில் மன்ற பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை வாசித்த போது நகர்மன்ற உறுப்பினர் சந்திரகுமார் (அ.தி.மு.க) மன்ற பொருட்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினார். அப்போது நகர்மன்ற ஆணையாளர் அடுத்து வரும் கூட்டங்களில் குறைகள் சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

 

பக்கிரிசாமி (தி.மு.க) பேசுகையில், "இறைச்சி கழிவுகள் புறவழிச் சாலையில் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்" எனவும், அன்பழகன் (திமுக) பேசுகையில், "பெரியார் நகர் பகுதியில் நவீன சுடுகாடு அமைத்து தர வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களிலும், திறந்த வெளியிலும் திறந்து விடுவதை தடுக்க வேண்டும்" எனவும், முத்துக்குமரன் (தி.மு.க) பேசும்போது," நகரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக மாரி ஓடையை உடனடியாக தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வழி தெரியாமல் தவிப்பதை போக்க ஜங்ஷன் சாலையில் ரயில் நிலையம் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும்" எனவும், த.வா.க உறுப்பினர் பி.ஜி.சேகர் பேசும்போது, "விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையின் நிலைமை மிகவும் அவலமாக உள்ளது. போதுமான மருத்துவர்கள்,  செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகளை வலுக்கட்டாயமாக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே போதுமான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனறார்.

 

ராஜேந்திரன் (அ.தி.மு.க) பேசும்போது, "விருதாச்சலத்தில் உள்ள ஹோட்டல்களில் முன்புறம் அடுப்பு உள்ளதால் உணவு சமைக்கும்போது மிளகாய் பொடி உள்ளிட்ட காரப் பொடிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் எரிச்சலை உண்டாக்குவதால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதனால் உணவகங்களின் பின்புறத்தில் அடுப்புகளை வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரினர். இவற்றுக்கு பதிலளித்து பேசிய நகர்மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், " உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

 

சிங்காரவேல் (பா.ம.க) பேசும்போது, "குப்பை கழிவுகள் எங்கே கொட்டப்படுகிறது என தெரியவில்லை. வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கப்படுகிறது. மணிமுத்தாற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மணிமுத்தாற்றங்கரையில் உள்ள படிக்கட்டுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். விருத்தாசலத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். தெப்பக்குளத்தை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும்" என்றார். அதற்கு ஆணையாளர், " குப்பை கழிவுகள் திடக்கழிவு திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்து வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் கூடத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மீறி குப்பைகளை எரித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் கருணாநிதி பேசும்போது, " பேருந்து நிலையத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி சிறு வாடகை வசூலித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" என பேசும்போது, அது சம்பந்தமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென அ.தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன் - தி.மு.க உறுப்பினர் பாண்டியன்  இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர் சந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர், தி.மு.க உறுப்பினர் பாண்டியனிடம் ஒருமையில் பேசியதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள், பா.ம.க உறுப்பினர் சிங்காரவேல் ஆகியோர், " தி.மு.க ஆட்சியில் நகர்மன்ற கூட்டத்தில் பாதுகாப்பு கிடையாது. அடுத்த முறை போலீஸ் பாதுகாப்புடன் தான் கூட்டத்தை நடத்த வேண்டும்" என்றனர். உடன் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸிடம், தி.மு.க உறுப்பினர் ஒருமையில் பேசுவதாக முறையிட்டனர். அதற்கு டாக்டர் சங்கவி முருகதாஸ், " இனிமேல் இதுபோன்ற நடக்காது" என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளியேற, தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறி நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் கூட்டத்தை முடித்து வைத்தார்.

 

திடீரென ஒருமையில் பேசியதாக கூறி அ.தி.மு.க, தி.மு.க உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்