சுவாசக் கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்றுவந்த மதுரை ஆதீனம் (வயது 77) நேற்று (13/08/2021) காலமானார்.
தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான சைவ திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். தமிழ்த் தொண்டு, ஆன்மீகத் தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈடுபட்டுவந்தார். மதுரை ஆதீனத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தான் சரி என்று நினைக்கக் கூடிய அரசியல், சமூக கருத்துகளையும் முன்வைத்தவர். முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டிவந்தவர் மதுரை ஆதீனம்.
ஆன்மிகப் பணிக்கு வருவதற்கு முன் 'தமிழ் மாலை' நாளிதழில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆன்மீக குருவாக இருந்தாலும் தமிழக அரசியல் விஷயங்களிலும் கருத்துச் சொல்லி வந்தார். கடந்த 1980 ஆண்டிலிருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருந்து வந்தார் ஆதீனம் அருணகிரிநாதர். சைவநெறி பரப்புதலுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவுள்ளார். சுமார் 500 க்கும் மேற்பட்ட கோயில்களில் இவர் தலைமையில் குடமுழுக்கு நடத்திவுள்ளார். கடந்த 2012ல் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்திருந்த நிலையில், அது பெரும் சர்ச்சையாகி நித்தியானந்தாவை மடத்தை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில் மடாதிபதியான அருணகிரிநாதர் கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல் மோசமடைந்ததை அடுத்து மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கி வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார்.
மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர், ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மதுரையின் அடுத்த ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர். இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் மறைவு காரணமாக அடுத்த ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளது.