
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அண்மையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. அக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை (09/03/2025) திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், ''நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்பட உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஓடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையைப் பெற இது ஒரு தொடக்கம் தான். நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம் மற்றும் முன்னெடுப்பு தொடர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் நம் சார்பில் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்பி அடங்கிய குழு நேரில் சென்று தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பதை நேரில் விளக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, இந்தி திணிப்பு என தொடர்ச்சியாக பாஜக அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. இவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க திமுக எம்பிக்கள் உட்பட அனைத்து எம்பிக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது தனிப்பட்ட ஒரு கட்சியினுடைய பிரச்சனை அல்ல தமிழ்நாட்டினுடைய பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் அனைத்து கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்.
மும்மொழி கொள்கை பிரச்சனையில் நம்முடைய வாதங்களை மிக எச்சரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். இந்தி திணிப்பைதான் நாம் எதிர்க்கிறோமே தவிர இந்தி மொழியையோ அல்லது இந்தி பேசும் மக்களையோ நாம் எதிர்க்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்'' என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களை இணைத்து களம் காண்போம்; தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்; தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம்; தமிழக தொகுதிகளை பாதுகாக்கும் முயற்சியில் முதல்வரின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்; ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைப்போம்; ஒருங்கிணைக்கும் பணியை திமுக எம்பிக்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மேற்கொள்வர்' என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.