Skip to main content

“என் காலு உயரம் கூட இல்ல” - உருவக்கேலி செய்த போலீஸ்; மாற்றுத்திறனாளிக்கு மாவுக்கட்டு 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

handicapped who rioted at the police station was admitted to the hospital

 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு வயது 32. உயரம் குறைவான மாற்றுத்திறனாளியான இவர். சொந்த ஊரில் வீடு வாசல் என உழைப்பின் மூலம் உயர்ந்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு, கிழக்கு கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோதனைச் சாவடியில், போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த நாகராஜின் டூவீலரை வழிமறித்த போலீசார், அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அப்போது, நாகராஜன் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

 

போதையில் இருந்த நாகராஜன் செய்த அலப்பறையால் டென்ஷனான போலீசார், அவரை அங்கிருந்து கொத்தாக தூக்கிக்கொண்டு கூவத்தூர் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். ஆனால், முழு போதையில் இருந்த நாகராஜ், போலீசாரை வாடா.. போடா,, என ஒருமையில் திட்டி வசைபாடியுள்ளார். அப்போது, பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், “கொஞ்சம் அமைதியா இருங்க” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே முழு போதையில் இருந்த நாகராஜுக்கு, பெண் காவலர் சொல்லுவது மண்டையில் ஏறவில்லை. மாறாக அவரையும் திட்டுகிறார்.

 

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஒரு கட்டத்தில், “நாகராஜை காமெடி பீஸ்.. உனக்கு என்ன திமிரு..” என கிண்டல் செய்கின்றனர். அதற்கு நாகராஜ் தனது சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு, காவல்துறையினரை தாக்க முயற்சிக்கிறார். பிறகு அங்குள்ள நாற்காலியில் மேல் சட்டை இல்லாமல், அமர்ந்து கொண்டு செல்போனில் அவருடைய வீட்டில் பேசுகிறார். பின்னர், “ஒரு மாசத்துக்கு வச்சி.. ஏன்டா என்ன அடிச்சீங்க.. மனித உரிமை ஆணையத்துக்கு போவேன்..” என கோவமாக பேசிக்கொண்டே அங்கும் இங்கும் நடக்கிறார். பின்னர், அவரை நெருங்கிச் செல்லும் போலீசார், “வீட்டுக்கு போடா.. போடா..” என அறிவுறுத்துகிறார். அப்போது, பேசும் இன்னொரு போலீசார், “நீ  என் காலு உயரம் கூட இல்ல.. எங்களையே மிரட்டுறியா?” என கேலி பேசுகிறார்.

 

மேலும், உள்ள வச்சி அடிப்பேன் என போலீசார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.  பிறகு, தனது கால்சட்டையில் இருக்கும் பணத்தை எல்லாம் வீசியெறிந்து செல்லும் நாகராஜ், “இந்தாங்கடா.. இதுக்குத்தானடா இவ்ளோ பண்றீங்க எனப் பேசுகிறார். பின்னர், என்ன ஏன்டா அன்னைக்கு சம்பந்தமே இல்லாம அடிச்சீங்க. நான் என்னடா பண்ணுனேன்..” என கண்ணீர்விட்டு அழுகிறார். இந்த வீடியோவை எடுத்த போலீசார் அதை இணையத்தில் பரவவிட்டதாகப் புகார் கூறப்படுகிறது.

 

இந்த வீடியோ வெளியானதும் இதுகுறித்து கருத்து தெரிவித்த பலர், நாகராஜ் குடிபோதையில் செய்ததை தவறு என்றும் நாளைக்கு கட்டு போட்டுட்டு போட்டோ வரும் என்றும் கிண்டல் செய்தனர். இன்னொரு தரப்பினர், நாகராஜ் செய்தது தவறுதான். அதற்கு போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னை செய்பவர்களை அவர்களின் குற்றத்தின் வழியேதான் அடிடையாளம் காண வேண்டும். அதைவிட்டுட்டு என் கால் உயரத்துக்கு கூட நீ இல்லை என உருவக் கேலி செய்வதெல்லாம் என்ன மாதிரியான செயல் என காட்டமாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இதனிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாகராஜ், என் காலை உடைத்தது போலீஸ்தான் எனக் கூறியுள்ளார். மூன்று போலீசார் சேர்ந்துகொண்டு என் காலை உடைத்து வீட்டுக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முதல்நாள் மாற்றுத் திறனாளி ஒருவர் குடிபோதையில் ஸ்டேஷன் வாசலில் நின்று ரகளை செய்ததாக வீடியோ வெளியான நிலையில், மறுநாள் அந்த நபர் கட்டுப் போட்டுக்கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் ஃபோட்டோ வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்