விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் கலப்பு உரத்திலும் பாதி அளவு மணல் கலப்படம் செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வாசு 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். நெல்லுக்கு கலப்பு உரம் இடுவதற்கு கடந்த 11ஆம் தேதி அருகிலுள்ள உரங்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்று இரண்டு கலப்பு உர மூட்டைகளை வாங்கியுள்ளார். தலா ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட 2 மூட்டைகளை 2,000 ரூபாய்க்கு வாங்கி, கலப்பு உரத்தை நெற்பயிர்களுக்கு வீசும் பொழுது ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்த வாசு உரத்தை அப்படியே வீட்டிற்கு கொண்டுவந்து தண்ணீரில் கரைத்து பார்த்துள்ளார்.
தண்ணீரில் கொட்டப்பட்ட அந்த உரத்தின் அடியில் மணல் தேங்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிலோ உரத்திற்கு அரை கிலோ மணல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று கேட்டபோது, மூட்டையை பிரிக்காமல் கொடுத்த தன் மீது எந்த தவறும் இல்லை என உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும், கலப்படத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து வேளாண் துறை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில், இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.
உணவுப் பொருள்களில் கூட கலப்படங்களை என்பதை அறிந்திருக்கிறோம் ஆனால் தற்பொழுது உணவு பொருட்களை விளைவிக்க பயன்படும் உரத்திலேயே கலப்படங்கள் செய்யப்படுவது, அதுவும் சரிபாதி அளவில் கலப்படம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.