வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை (26.09.2021) கரையைக் கடக்க இருக்கிறது. உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். இந்தப் புயலுக்கு 'குலாப்' என பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பரிந்துரையின் பேரில் இந்தப் புயலுக்கு குலாப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் குலாப் புயல் ஒடிஷா, ஆந்திரா அருகே கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில், துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் மழை பாதிப்பில் மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கவைப்பதற்குத் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.