இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,
இன்று நடைபெற்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கிறது. வருகிற 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவுசெய்துள்ளோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை பெறுவோர் பட்டியலில் உள்ள அண்டை நாடுகளில் பட்டியலில் இலங்கை இடம்பெறாமல் போனது ஏன்? அகதிகளாக வரும் வேறு மதத்தினரில் இஸ்லாமியரை தவிர்த்திருப்பது ஏன்? இந்த இரண்டு கோரிக்கைகளை வைத்துதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர், பாமக மாநிலங்களை உறுப்பினர் ஒருவர் என 12 பேர் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்ததால்தான் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் தமிழின துரோகிகள் என்றுதான் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்றார். அனைத்து கட்சி கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு இந்த மசோதாவால் எந்த பாதிப்பும் இல்லை என முதல்வர் எடப்பாடி கூறியுள்ளாரே?
அதிமுக மற்றும் எடப்பாடியை பொறுத்தவரை மோடி, அமித்ஷா, மத்திய அரசு என்ன செல்கிறேதோ அதை அப்படியே அடிபணிந்து, காலில் விழுந்து ஏற்றுக்கொள்பவர்கள் எனவே அவர் அப்படி சொன்னது ஆச்சர்யமில்லை என்றார்.
மேலும் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேரணியில் கட்சியையும் தாண்டி அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.