கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதற்கு அச்சுங்கச் சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி.கள் மற்றும் ஃபாஸ் டாக் இயந்திரங்களை முடக்கியும் போராடிவருகின்றனர். இதற்கு சுங்கச்சாவடி உரிமையாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும், சுங்கச்சாவடிக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு மற்றும் சுங்கச் சாவடி சுற்றியுள்ள எட்டு கி.மீ தொலைவுக்கு எந்தவித போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி சரவணன் முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் தரப்பில், போராட்டத்தின் காரணமாக இரண்டு நாட்களாக சுங்கச் சாவடிகளில் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் டாக் நுழைவு வாயிலில் உள்ள ஃபாஸ்ட் டாக் செயல்பாட்டை முடக்கியுள்ளனர். இதன் காரணமாக தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதாடப்பட்டது.
அரசு தரப்பில் வாதிடும்போது, உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டாக் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சரவணன், ஊழியர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்த எந்தவித தடையும் இல்லை. அதேசமயம், வாகன போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. சுங்கச் சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு நீடிக்க வேண்டும். இயல்பான நிலையில் சுங்கச் சாவடி இயங்க காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு வரும் 10ம் தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.