தமிழகத்தில் இதுவரை நடந்த எந்த போராட்டங்களுக்கும் அரசு தீர்வு கண்டதில்லை என திமுக எம்.பி., கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த அரசு என்ன நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதே கிடையாது. இதுவரை நடந்த போராட்டங்களுக்கு எந்த தீர்வும் கண்டதில்லை. ஒரு அரசாங்கத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியதற்கு முதலமைச்சர் பதில் சொல்வார் என்று அவர் கூறி தனது பொறுப்பை தட்டிக் கழித்து இருக்கிறார்.
போக்குவரத்துகழக ஊழியர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை எதற்கும் சரியான தீர்வு கண்டதில்லை. இந்த அரசின் செயல் கேலி கூத்தாக இருக்கிறது. இந்த அரசு நல்லது செய்யும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. எத்தனை நாளைக்கு டெல்லிக்கு காவடி தூக்கி இந்த அரசாங்கத்தை தொடர முடியும். மக்களை சுரண்டி பணம், சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இந்த அரசுக்கு அக்கறை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.