சேலம் கோட்டத்தில், செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் செல்போனில் பேசியபடி, பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஓட்டுநர்கள், நடத்துநர்களின் ஒழுங்கு செயல்பாடுகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மல்லசமுத்திரம் நோக்கி நவ. 3ம் தேதி, அரசு நகரப்பேருந்து ஒன்று சென்றது. சேலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் அந்தப் பேருந்தை ஓட்டிச்சென்றார். பேருந்து, காளிப்பட்டி அருகே சென்றபோது வழியில் டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது ஓட்டுநர் சண்முகம், ஒரு கையால் செல்போனை காதில் வைத்து பிடித்தபடி பேசிக்கொண்டே, மற்றொரு கையால் ஸ்டீயரிங் ராடை இயக்கி, பேருந்தை செலுத்திக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த டிக்கெட் பரிசோதகர்கள், சேலம் கோட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததை அடுத்து, சண்முகத்தை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.