திருவண்ணாமலையில் சிறுமி ஒருவர் சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கணிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்- ஜோதி தம்பதியின் 6 வயது குழந்தை காவியாஸ்ரீ. வீட்டின் அருகே பெட்டிக் கடையில் காவியாஸ்ரீ சிறிய ரக பாட்டிலில் வைத்து அடைத்து விற்கப்படும் பழரச குளிர் பானத்தை வாங்கி குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி காவியாஸ்ரீக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியது. உடனடியாக சிறுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி காவியாஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கு காலாவதியான குளிர்பான பழரசம் தான் காரணம் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் தனியார் குளிர்பான ஆலைகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால் வேனா உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி தமிழகம் முழுவதும் குளிர்பானங்கள் விற்கப்படும் கடைகள் மற்றும் மொத்த விற்பனை இடங்கள், குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் கடந்த மூன்று நாட்களில் 107 இடங்களில் நடைபெற்ற ஆய்வில் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதோடு 10 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காலாவதியான குளிர்பானங்களை விற்ற கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.