
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், விலையைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று (04.11.2021) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாநில அரசுகள் தங்கள் மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பாஜக ஆளும் பல மாநில அரசுகளும் அதைப் பின்பற்றி தங்கள் மாநிலத்தின் மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்துள்ளன. அதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் ரூ. 7-8 மற்றும் டீசல் ரூ. 9-10, கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் அரசுகள் ரூ. 7, உத்தரப்பிரதேசம் அரசு ரூ. 12, உத்தரகாண்ட் அரசு ரூ. 2 என குறைத்துள்ளன.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், “திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ. 7 குறைக்கப்பட்டதைப் போல் தமிழகத்திலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.