புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கோமாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறைகள், வராண்டாவில் மாடுகளை கட்டி வராண்டா முழுவதும் மாட்டுச் சாணம் நிறைந்து கிடப்பதையும், மாணவர்கள் அதனை தாண்டி வகுப்பறைகளுக்கு செல்லும் அவல நிலையையும், துர்நாற்றத்துடன் வகுப்புகள் நடப்பது குறித்தும் 16 ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் ‘பள்ளிக்கூடமா? மாட்டுக்கொட்டகையா? அரசுப் பள்ளி அவலம்!’ என்ற தலைப்பில் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த பள்ளியின் அவல நிலை குறித்த நக்கீரன் செய்தி பற்றிய தகவலை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அனைவரும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று(17.12.2024) காலை கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டாட்சியர், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் குரு.மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் பள்ளி வராண்டாவில் மாட்டுச் சாணம் கிடந்து அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை செய்துள்ளனர்.
மேலும், பள்ளி வராண்டாவில் மாடுகள் போட்டிருந்த சாணங்களை அதே வளாகத்தில் தனியாக ஒரு குப்பைக் கிடங்கில் குவித்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் இது போன்ற குப்பைக் கிடங்குகள் இருக்கக் கூடாது உடனே சாணக் குப்பைகளை பள்ளி வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனையடுத்து இன்று(18.12.2024) புதன் கிழமை காலை கோமாபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி தூய்மைக் காவலர்கள், பள்ளி வளாகத்தில் சேகரித்து கொட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் மாட்டுச் சாணங்களை அகற்றினர். மேலும் பள்ளி கேட்டில் உடைக்கப்பட்ட பூட்டுகளுக்கு மாற்றாக புது பூட்டுகளும் வாங்கப்பட்டுள்ளது. அதே போல் பள்ளி சுற்றுச் சுவரில் உடைந்துள்ள பகுதிகளை சீரமைத்துக் கொடுத்தால் மாடுகள் உள்ளே வருவதை தடுக்கலாம் என்கின்றனர்.
இனிமேல் பள்ளி வளாகத்திற்குள் மாடுகளை விட வேண்டாம் என்று கிராமத்தின் சார்பில் தண்டோரா போட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு ஆய்விற்கு சென்றால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்று கூறும் கிராம மக்கள் இரவில் இளைஞர்களின் சமூக விரோத செயல்களை தடுக்க கந்தர்வக்கோட்டை போலிசார் இரவு ரோந்து வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.