![nr](http://image.nakkheeran.in/cdn/farfuture/hMjP-oAp-EI_udmS56XupWq8GXdap92dwCuBw79Hoss/1533347664/sites/default/files/inline-images/narayanasamy_6.jpg)
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் மதிய உணவாக புளியோதரை, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, சுண்டல் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரியில் உள்ள 300 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு மதிய உணவாக புளியோதரை, தக்காளி, தயிர், வெஜிடபுள் சாதங்களுடன் சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, சுண்டல் உள்ளிட்ட அறுசுவை வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் மற்றும் அட்சய பாத்திரா அறக்கட்டளையும் இணைந்து இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கையெழுத்தானது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் 33 மைய சமையற்கூடங்கள் வாயிலாக சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு அட்சய பாத்ரா அறக்கட்டளை உணவு தயாரித்து வழங்கி வருவதாகவும், தற்போது புதுச்சேரியில் உள்ள 50,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையற்கூடம் ரூபாய் 13 கோடி செலவில் முழுவதும் தானியங்கி சமையற்கூடமாக மாற்றப்பட்டு, மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சாம்பார் சாதமும், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு புளியோதரை, தக்காளி சாதம், வெஜிடபுள் சாதம் போன்ற கலவை சாதங்களும், அதனுடன் சேர்த்து உருளை கிழங்கு பொறியல், சுண்டல், சப்பாத்தி, இனிப்பு பொங்கல், தயிர், பாயாசம் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதன் மூலம் அரசுக்கு மதிய உணவு திட்டத்திற்கான செலவு பாதியாக குறையும் என்றும் இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.