Skip to main content

“உழைச்சுப் பிழைக்க வேலைதானய்யா கேட்கிறோம்” - கண்ணீரில் அரசு பண்ணை தொழிலாளர்கள்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Government farm workers struggle in Pudukkottai

 

அரசு பண்ணைகளில் அரசு வேலை செய்வோர் முதல் தினக்கூலியாக தோட்டவேலை செய்வோர் வரை 60 வயதுக்கு மேல் பணி செய்ய அனுமதியில்லை என்று 2004ம் ஆண்டு எழுதிய ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு 2023ம் ஆண்டு தோட்டவேலை செய்யும் தினக்கூலி பண்ணை தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலால் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை போராட்டக்களமாக மாறியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் பயறு வகை விதை உற்பத்தி பண்ணை, பாட்டுமங்கலம், வல்லத்திராகோட்டை பழம் மற்றும் பல மரக்கன்றுகள் உற்பத்தி பண்ணை, வெள்ளாளவிடுதியில் தேங்காய், கடலை போன்ற எண்ணெய் வித்து மற்றும் விதை உற்பத்தி பண்ணை, குடுமியான்மலையில் விதை உற்பத்தி பண்ணை என பல பண்ணைகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகின்றன. இந்தப் பண்ணையில் கடந்த 35, 40 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களே தினக்கூலிகளாக தோட்டவேலை செய்து வருகின்றனர். இந்த பண்ணை வேலையால் இந்த குடும்பங்களில் உலை கொதிக்கிறது. 

 

இந்த நிலையில் தான் குடுமியான்மலை அண்ணா பண்ணையில் வேலை செய்யும் சுமார் 50 பேருக்கு 60 வயது கடந்துவிட்டதாகக் கூறி கடந்த வாரம் வேலையில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். வேலையிழந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியதால் அங்கு வந்த அதிகாரிகள் வேலை கொடுப்பதாக உறுதி கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அந்த உறுதி 2 நாட்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் வேலை பறிப்பு செய்யப்பட்டனர். வேலையிழந்த பண்ணை தொழிலாளர்கள் இன்று பாய், தலையணை, அடுப்பு, விறகு, பாத்திரங்களுடன் அண்ணா பண்ணையில் குடியேறியுள்ளனர். எங்களுக்கு வேலை கொடு! உடலில் உழைத்துப் பிழைக்க தெம்பிருக்கும் வரை வேலை கொடு! என்று முழக்கங்களுடன் பேரணியாகச் சென்று குடியேறியுள்ளனர்.

 

இது குறித்து போராட்டக்களத்தில் நின்ற நியாஷ் கூறும்போது, “தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. உழைக்கும் உடற்திடமும் மனத்திடமும் அவர்களிடம் உள்ளது. தினக்கூலி ரூ. 1.50க்கு வேலைக்கு வந்தவர்களுக்கு இப்போது ரூ. 420 கிடைக்கிறது. இந்த சம்பளத்தை வைத்து தான் வயதான காலத்தில் வயிறாற சாப்பிடுகிறார்கள். ஆனால், திடீரென 2004ல் இயக்குநர் எழுதிய கடிதத்தைக் காட்டி வேலைகளைப் பறிக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. வேலையில் சேர்க்கும் போது வயதுவரம்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் விதை உற்பத்தியை ஊக்கப்படுத்தி உள்நாட்டு விதை உற்பத்தியை நிறுத்துவதற்காக இந்த வேலை பறிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

சுமார் 35, 40 ஆண்டுகளாக பண்ணைக்காக உழைத்தவர்களுக்கு நிபந்தனையின்றி வேலை கொடுக்க வேண்டும் அல்லது அவர்களின் பணிக்காலத்தை கணக்கிட்டு பணக்கொடை வழங்க வேண்டும். அதுவரை பண்ணை தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டக்களத்தில் நிற்போம். தமிழ்நாடு முதலமைச்சர் உடனே தலையிட்டு தினக்கூலித் தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்பு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

இதே போல அனைத்து அரசு பண்ணை தொழிலாளர்களையும் வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்