![Gold in flight; Trapped customs officials](http://image.nakkheeran.in/cdn/farfuture/k4gp5FU9c-7fhYAWcciwP-wGdSFB9SPeBEEbxDQj0Ag/1686980265/sites/default/files/inline-images/th-1_4052.jpg)
தங்கம் கடத்த உடந்தையாக இருந்த இரண்டு விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் தேதி அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில் 4.8 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதனை மடக்கிப் பிடித்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், கடத்தி வந்தவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதானவர்கள் விமான நிலையத்தில் இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் தான் தங்கம் கடத்தி வந்ததாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய சுங்கத்துறை இயக்குநரக அதிகாரிகள், கடத்தல் கும்பலுக்கு தொடர்புடைய முகம்மது(39), நிதின்(48) ஆகிய இரண்டு அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் உதவியுடன் 80 கிலோ தங்கம் கடத்தப்பட்டு இருந்ததையும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.