கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள கீழக்கல்பூண்டியில் சங்கர் என்பவர் நகைக் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு, தொழுதூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் நகைக் கடை உரிமையாளர் சங்கருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த ஒரு டன் எடையுள்ள பீரோவும் அதில் விற்பனைக்கு வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் ,10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான அடகு பிடித்து வைத்திருந்த நகைகளும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
கொள்ளையர்கள் கடையிலிருந்து 500 மீட்டர் தூரம் வரை பீரோவை உருட்டிச் சென்று வயல் பகுதியில் வைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.