1996 ஆம் ஆண்டு இனிய உதயம் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியானது. பின்பு தான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது என்று. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகிய இருவருக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் தமிழ்நாடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எந்திரன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீதும் காப்புரிமை சட்டத்தின்படி புகார் அளித்திருந்தார்.
1996ல் தான் எழுதிய கதையை திருடி 'எந்திரன்' எனும் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை நீண்ட நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீசார், இறுதியில் புகார் தொடர்பாக எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீதும் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோர், 'எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது. நாங்கள் கதையை திருடவில்லை. எனவே அந்த வழக்கு செல்லாது என உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முறையிட்டனர்.
எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் இன்று நீதிபதி புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது. கதை ஒரே மாதிரி இருப்பதால் காப்புரிமை மீறல் தெரிகிறது. அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் அம்சமாக, இயக்குனர் சங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அங்கு கூட்டம் கூடுவது மற்றும் அலுவலக இடையூறுகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்திற்கு தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜராகினால் போதும். எல்லா வாய்தாவிற்கும் அவர் ஆஜராக தேவையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெற்றி தீர்ப்பாக கருதப்படுகிறது. காப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளர் தன் கதையை ஒருவர் திருடி திரைப்படம் ஆக்கிவிட்டார் என நீதிமன்றத்திற்குச் சென்று புகார் கொடுத்து அந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் உள்ளது. வழக்கு நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தத் தீர்ப்பையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கும். விசாரணையின் இறுதியில் சங்கர் கதை திருடினாரா? இல்லையா? என்பது நிரூபணமாகும்.