காவிரி மேலாண்மை வாரியம்! அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்! என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத மேற்பார்வை குழுஒன்றை பெயரளவுக்கு அமைப்பதென மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழ்நாட்டுக்கு செய்யப்படும் அப்பட்டமான துரோகமாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும். கெடு முடியும் காலம் வரை பொறுத்திருந்துப் பார்ப்போம் என்று தமிழக அரசு சொல்லி வந்தது. இப்போது மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. எனவே, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை இறுதி செய்ய உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஒன்பது உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், அதன் தலைவராக நியமிக்கப்படுபவர் தலைமை பொறியாளர் பொறுப்பில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும், மத்திய அரசால் நியமிக்கப்படும் 2 முழுநேர உறுப்பினர்களும் பொறியியல் வல்லுனராகவும் , வேளாண் துறை வல்லுனராகவும் இருக்க வேண்டும் என நடுவர் மன்றம் தெளிவாக வரையறுத்திருந்தது. ஆனால் தற்போது மோடி அரசு ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தத்துறையில் அனுபவம் இல்லாதவர்களை நியமித்தால் நிச்சயம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாது.
உச்சநீதிமன்றம் கூறியபடி, நடுவர்மன்றம் வரையறுத்துள்ள விதத்தில் மார்ச் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் அதை முடிவு செய்வதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை மீண்டும் உடனடியாகக் கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.''