
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (13/09/2021) நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்களிக்கக் கோரும் சட்ட மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன், சில தொகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 51 விதமான தகவல்கள் கடந்த ஒருமாதமாக சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. கடன் பெற்றவரின் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண் ஆகியவை ஒருமாதமாக சேகரிக்கப்பட்டன.
கடன் பெற்றவரின் ரேஷன், ஆதார் அட்டை எண், முகவரி, செல்ஃபோன் எண் உள்ளிட்டவையும் சேகரிக்கப்பட்டுள்ளன. கடன் தள்ளுபடியில் சரியான, தகுதியான ஏழைகள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று அரசு கருதுகிறது" என தெரிவித்தார்.