Skip to main content

“கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது..” - ஜி.கே வாசன்

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

GK Vasan addressed press after paying homage to Kamarajar

 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஜி.கே வாசன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தாரிடையே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். நன்றாக இருப்பதாகவும் விரைவில் பணிக்கு திரும்புவார் என்று தெரிவித்தனர். அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று கனிவோடு செயல்பட வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு மத்திய,மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை துரிதப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உரங்களை வழங்க வேண்டும். இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். பொதுப்பணித்துறை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும். 

 

சன்மார்க்க சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர் ஊரான் அடிகளார் மறைவு தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் பெரிய இழப்பு. GST வரி ஏற்ற, இறக்கம்‌ என்பது நிரந்தரமல்ல. நிதித்துறையை பொறுத்தவரையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதில் மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டு சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு முடிவு எடுக்கிறார்கள். மக்களை பாதிக்கின்ற முடிவென்றால் அதனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். இருப்பினும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்றார்,


மேலும் செய்தியாளர்கள், ‘திராவிடம் என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சொல்’ என்ற ஆளுநரின் பேச்சை பற்றி கேட்டதற்கு “கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது” என்று தெரிவித்தார். 

 

இந்நிகழ்ச்சியில், த.மா.கா. திருச்சி மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் குணா, வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்