வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை நேற்று மாலை (30.08.2024) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, கைத்தறி துணிவு துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் திறந்து வைத்தார்கள். நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
விழா நடைபெற்ற சமயம் கனமழை பெய்தது அதனையும் பொருட்படுத்தாத மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு தலா ரூ.200 பணம் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க நபர் ஒருவர் பணம் கொடுக்கிறார். இதில் சிறுவர்கள் வரிசையில் வந்த போது அவர்களுக்குப் பணம் இல்லை என அந்த நபர் கூறியதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அரசு விழாவிற்கு வந்தவர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.