திமுக எம்.எல்.ஏவும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்று டிஜிட்டல் பேனர் வைத்த போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள குப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன்(39). இவர், கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகம் காவல் துறையில் சேர்ந்துள்ளார். இவர், தற்போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் கதிரவன் அங்கு சென்று பணியில் சேராமல் விடுமுறையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை சீருடை அணிந்த நிலையில் வெளிவந்த உதயநிதியின் படத்தை டிஜிட்டல் பேனராக வைத்துள்ளார். அதில் தனது பெயரையும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை என்றும் அச்சிட்டு வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளையபெருமாள் புகார் அளித்தார். அந்த புகாரில் காவல்துறையின் அனுமதி பெறாமல் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றும் கதிரவன் டிஜிட்டல் பேனர் வைத்தது போலீஸ் துறைக்கு அவமதிப்பை உண்டாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகாரை ஏற்ற சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார், கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி சிதைவு தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.