![vanathi](http://image.nakkheeran.in/cdn/farfuture/BoOafvo6hc6KgIvNP7Ga7yjn8kkg1bfH3M03JpxuQsM/1533347646/sites/default/files/inline-images/dc-Cover-3q3iq7stokqfuip4gp4dja16d6-20170511060944.Medi_.jpeg)
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் விளக்கு ஏற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தவறாக புரிந்துகொண்ட அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கோவையிலுள்ள புகழ்பெற்ற லஷ்மிநரசிம்மர் , சங்கமேஷ்வரர், கோனியம்மன் கோவில்களில் செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் ராகு காலம் போன்ற சமயங்களில் நெய் தீபம் ஏற்ற கூடாது என இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து தமிழக பாஜக வின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சங்கமேஷ்வரர் கோவிலில் அறநிலையத்துறை வைத்திருந்த விளக்கேற்றும் இடத்தில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் விளக்கு ஏற்றக்கூடாது என அரசு சொல்லவில்லை எனவும், விளக்கு ஏற்றுவதற்கு ஒரு பணியாளரை நியமித்து பாதுகாப்பான இடம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.. இந்த இடத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்கப்படுகிறது என விளம்பர பலகை வைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரினார். மேலும் ஒவ்வொரு பக்தர்களும் விளக்கு ஏற்றுவதற்கு மற்ற கோவில்களிலும் அனுமதிக்க வேண்டும். கடந்த வாரம் அனுமதி மறுக்கப்பட்டதால்தான் தற்போது வந்ததாக தெரிவித்தார். தமிழக கோவில்களில் நெய் தீபம் விற்பனை செய்யப்பட்டு வந்தது , அரசின் உத்தரவை அடுத்து விற்கப்படவில்லை. இனிமேல் தகுந்த பாதுகாப்பு அளித்து நெய் தீபம் விற்பனை செய்ய கோரிக்கை விடுத்தார். இந்து சமய அறநிலையத்துறையின்
சுற்றறிக்கைக்கு எதிராக நடக்கவில்லை எனவும், விளக்கு ஏற்றும் இடத்தில்தான் விளக்கு ஏற்றி இருக்கிறோம். அந்த சுற்றறிக்கையை மீறியதாக கருதினால் வழக்கு போட்டுக்கொள்ளலாம் என்றார். இனிமேல் ஒவ்வொரு கோவில்களிலும் விளக்கு ஏற்ற உரிய இடம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.