புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகமாக நடக்கிறது. மாவட்ட போலீசாரும் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தாலும் மீண்டும் மீண்டும் விற்பனை தொடர்கிறது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்ட எல்லை கிராமமான புளிச்சங்காடு கைகாட்டியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேயின் தனிப்படை உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் குழுவினருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு கஞ்சா விற்பனைக்காக காத்திருந்த கிருஷ்ணாசிப்பட்டினத்தைச் சேர்ந்த காசிம் புதுப்பேட்டையில் தங்கியுள்ள நூர்முகமது மகன் இப்ராம்ஷா (40) மற்றும் அவரது கூட்டாளி காசிம்புதுப்பேட்டை நசுமுதீன் மகன் முகமது ஜாஸூம் (30) ஆகிய இருவரையும் பிடித்து சோதனை செய்த போது சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள், பணம் ஆகியவற்றைக் கைப்பற்றி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இருவர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இப்ராம்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யும் போது தனிப்படை போலீசார் பிடித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கீரமங்கலம் போலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த உடன் மீண்டும் கஞ்சா விற்பனையைத் தொடங்கியது தெரிய வந்துள்ளது.