
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’8 மாவட்டங்களில் ஏற்பட்டு இருக்கும் கஜா புயலின் தாக்கத்தை, தமிழக அரசானது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுத்து இருந்தால் பாதிப்புகளை தவிர்த்து இருக்கலாம்.
மேலும் அரசாங்கத்தால் கணக்கெடுக்கப்பட்ட இழப்பை விவசாயிகள் சரி செய்வதற்கு பத்து ஆண்டுகள் பிடிக்கும். அரசாங்கம் அறிவித்த நிவராண தொகை குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டு இருக்கும் நிதி கூட , சரியான முறையில் கணக்கெடுக்காமல், அவசர கதியில் கேட்ட தொகைபோல் உள்ளது. மத்திய அரசு கடந்த காலங்களில் வழங்கிய நிவாரண தொகை போல் வழங்காமல், மக்களின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நிதி வழங்கவேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய குடிசை இல்லா மாவட்டம் என்ற திட்டத்தின் மூலம் சரி செய்தது போல, தமிழக முதலமைச்சர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட, 8 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும், இடம் இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கியும், குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.
இதே போல் நெய்வேலி என்.எல்.சி நிறுவனமும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில கிராமங்களை தத்தெடுத்து, நிரந்தரமாக நிவாரணம் வழங்க வேண்டும். வருமானம் அதிகளவு ஈட்டுகிற என்.எல்.சி நிறுவனமானது நிலம் கொடுத்து இழந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு வேலைகள் கொடுக்கவில்லை. அவுட்சோர்சிங் என்று வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குகிறது. அது தவறு.
முறையான காண்டிரக்ட் முறையில் வேலை கொடுக்க வேண்டும், அப்பரண்டிஸ் படித்து முடித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவில் நடந்திருக்கும் 2400 கோடி ஊழல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இக்குற்றங்களை செய்த குற்றாவாளிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகை 340 கோடி தமிழக முழுவதும் 1400 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை, தமிழக அரசு தலையிட்டு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.’’