கள்ளக்குறிச்சி தீர்த்தாலு நகரில் வசித்து வருபவர் கதிரவன்(45). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனா காரணமாக சொந்த ஊரில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார். கதிரவன், திருச்சி அருகில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், அவசிய ஆலயங்களை தரிசிப்பதற்காக நேற்று காலை தனது மகன் சந்திரவதனன், தாய் தமிழரசி(65), இவரது தம்பி கார்முகில்(40), அவரது மகன் லிங்க நேத்ரன்(8), இவர்களது குடும்ப நண்பரான கண்ணன்(45), அவரது மனைவி வேதவல்லி(40), இவரது மகன்கள் கிஷோர்(12), திவாகர்(6) ஆகியோருடன் ஒரே காரில் சென்றுள்ளார்.
அப்படி கோவில்களுக்கு சென்றுவிட்டு மீண்டும், கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்தபோது சிறுவாச்சூர் அருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, விஜய கோபாலபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கதிரவன் ஓட்டிவந்த காருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த கார், இவர்கள் காரை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது. இதனால், கதிரவன் அந்த காருக்கு வழிவிட வலதுபுறமாக திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரியில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
இதில், கார்முகில் அவரது மகன் லிங்க நேத்திரன், கண்ணன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஒருவருக்கு மட்டும் எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.