![cc](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mc2xV9vfVwKgSJgvRWwccJnTGbMNZsj401MSOZ4aRlg/1549279580/sites/default/files/inline-images/car-in.jpg)
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஐ.டி ஊழியர் நவீன் சாமுவேல், பூபதி உள்ளிட்டோர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராம பகுதியில் சென்றபோது காரின் டயர் வெடித்ததால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவிலுள்ள தடுப்பில் மோதி எதிரே திருவண்ணாமலையிலிருந்து பரமக்குடிக்கு சென்றகொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் சாலையோரத்தில் விழுந்தன.
இதில் சென்னை நோக்கி சென்ற காரில் இருந்த நவீன் சாமுவேல், பூபதி உள்ளிட்ட 4 பேர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல் பரமக்குடி நோக்கி சென்ற மற்றொரு காரில் பயணம் செய்த சரவணபெருமாள், சுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், ராஜபதி ஆகிய 4 பெரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பாலகிருஷ்ணன், ராஜபதி ஆகியோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சரவணப்பெருமாள், சுந்தரராஜன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திட்டக்குடி டிஎஸ்பி தங்கவேலு, விபத்தை ஆய்வு செய்தார். இந்த கோர விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.