Skip to main content

முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு... வழக்கை தள்ளிவைத்த நீதிபதி!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021
Manikandan petitions for bail: Judge postpones case

 

நடிகை சாந்தினியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி போலீசில்  புகாரில் அளித்துள்ளார்.

 

இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல்,  பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கில்  நடிகை செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

மணிகண்டனுக்கு, முன்ஜாமீன் வழங்க கூடாது என நடிகை சாந்தினி இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை என கூறியதாகவும், மூன்று முறை கருத்தரித்தபோது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை சாந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, மணமுடிப்பதாக நம்பவைத்து  மோசடி செய்துள்ளதாகவும், தன்னுடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாலும் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.

 

மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன், குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், நடிகையின் ஆட்சேபனை மனு கிடைத்துள்ளதாகவும், வழக்கு முடியும் வரை கைது செய்யக்கூடாது என வாதிட்டார். காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாலும், இடைக்கால உத்தரவு வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்ற நடிகையின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்