Skip to main content

தமிழ்நாடு ஆளுநராகும் இரண்டாவது காவல்துறை அதிகாரி ஆர்.என்.ரவி!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

 

former ips officer appointed the governor of tamilnadu

தமிழ்நாடு ஆளுநராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு ஆளுநர் நியமனத்தில் பின்னணி குறித்து பார்ப்போம்!


தமிழ்நாடு ஆளுநராக இருந்தவர்களில் மிக சிலர் மட்டுமே அரசியல் பின்னணி இல்லாதவர்கள். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. காவல்துறையைப் பின்னணியாகக் கொண்ட பிரமுகர் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2002- ஆம் ஆண்டு ஆந்திர மாநில காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. பிஎஸ் ராமமோகன் ராவ் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணக்கமானக் போக்கைக் கடைபிடித்த பிஎஸ் ராமமோகன் ராவ், இரண்டு ஆண்டுகளிலேயே வடகிழக்கு மாநிலங்கள் ஒன்றின் ஆளுநராக மாற்றப்பட்டார்.

 

ஆனால் அந்த இடமாற்றத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. எனினும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்காத நிலையில், தனது ஆளுநர் பதவியை பிஎஸ் ராமமோகன் ராவ் ராஜினாமா செய்தார். 

 

இந்த நிலையில், பிஎஸ் ராமமோகன் ராவுக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்று நான்கு மாதங்களில் புதிய ஆளுநர் நியமனம் நடைபெற்றுள்ளது. காவல்துறை, உளவுத்துறைச் செயல்பாடுகளில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட, தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக நிலவி வந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆர்.என்.ரவியின் பங்கு முக்கியம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்திக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை சரணடைய வைத்து, அமைதி பாதைக்கு திரும்ப வைத்ததில் முக்கிய பங்காற்றியவர். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவு தகவல் சேகரிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதில் ஆர்.என்.ரவி மிகச்சிறந்த நிபுணர் ஆவார். 


 

சார்ந்த செய்திகள்