இந்தியாவின் முதல் குடிமகன் என்றால் அது நாட்டின் குடியரசுத் தலைவர்தான். அப்படிப்பட்ட குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் உச்சநீதிமன்றத்தின்தலைமை நீதிபதியாவார். இந்த பொறுப்பு அவ்வளவு உயரிய இடமாகும். அப்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் தான் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் சதாசிவம்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு விவசாயக் குடும்பம் மட்டும்தான் இவரது பின்னணி. இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசு இவருக்கு ஒரு பொறுப்பை வழங்கியது. அது கேரளா மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு. கேரளாவின் ஆளுநராக பதவிக்காலத்தை நிறைவு செய்த சதாசிவம், பிறகு தனது சொந்த கிராமத்திற்கு வந்து விட்டார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்படித்தான் நேற்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது சதாசிவம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசும்போது, "நீதிபதிகள் எந்த மாநிலத்துக்கும் சென்று கடமை ஆற்ற வேண்டும். தற்போதுள்ள நீதிபதிகளில் மேகலாயாவுக்கு பணிமாறுதல் கொடுத்தால் அங்கு செல்ல மாட்டேன் என முடிவு செய்கிறார்கள். அப்படி நானும் வேறு மாநிலத்தில் பணி செய்ய மாட்டேன் என முடிவு செய்திருந்தால் இந்த நேரம் நான் எனது கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் விவசாயம் செய்டும், மாடு மேய்த்துக் கொண்டும் தான் இருந்திருப்பேன். இப்படிப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு நான் வர முடியாமல் போயிருக்கும். மாணவர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையால் முன்னேற வேண்டும் என்று கூறினார்.