சென்னை வேளச்சேரி எஸ்பிஐ வங்கி கிளையில் கடந்த 2016-2017ம் ஆண்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்த இசக்கிராஜா (34) மற்றும் விருகம்பாக்கம் சாரதா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சித்ரா (34) ஆகியோர் கார் வாங்க லோனுக்கு பதிவு செய்திருந்தனர்.
பின்னர், அவர்கள் அளித்த ஆவணங்கள் படி கார் வாங்க எஸ்பிஐ வங்கி சார்பில் 3 கோடியே 37 லட்சத்து 71 ஆயிரம் பணத்தை வழங்கியது. ஆனால் வாங்கிய பணத்தை வைத்து எந்தவித கார்களும் வாங்காமல், அந்த பணத்தை வைத்து ‘‘அருவா சண்ட’’ என்ற திரைப்படத்தை எடுத்துள்ளனர்.
காருக்கான மாத தவனையும் இருவரும் வங்கியில் செலுத்தவில்லை. இதையடுத்து, எஸ்பிஐ வங்கி மண்டல மேலாளர் பத்மநாபன் அளித்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 19ம் தேதி இசக்கிராஜா மற்றும் முன்னாள் கவுன்சிலர் சித்ராவை கைது செய்தனர்.
இந்நிலையில் இருவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்ததை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் சித்ரா மற்றும் இசக்கி ராஜா ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.