சேலத்தில், வனத்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்தபோது, பணியில் இல்லாததால் மாவட்ட வன அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்தவர் கவுதம். இவர், பணிக்கு சரியாக வருவதில்லை என்ற புகார் எழுந்தது. குடும்பப் பிரச்சனை காரணமாக பணிக்கு அடிக்கடி மட்டம் போடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 4- ஆம் தேதி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சேலம் குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவை ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வின்போது கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்று கவுதமுக்கு அறிவுறுத்தப்பட்டும், அவர் பணிக்கு வரவில்லை.
இதையடுத்து, பணியில் ஆர்வமின்றி இருப்பதாகவும், அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததாலும், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.