கரோனா காலம் மனித குலத்திற்கே கொடிய காலம் தான் என்றாலும்... வயிற்றுப்பிழப்புக்காக ஊரு விட்டு ஊர்... சொந்த மாநிலம் விட்டு வெளி மாநிலம் எனப் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் உழைப்பைக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தில் வாழ்ந்து வந்த அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை மட்டுமல்ல எதிர்கால நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாகச் சிதைத்து விட்டது இந்த கரோனா காலம்.
வாழ வந்த இடத்தில் எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் உயிரைப் பிடித்துக் கொண்டு பிறந்த மண் நோக்கி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அப்பாவி தொழிலாளிகள் நடந்து செல்லும் அவலம் நம் இந்திய மண்ணில் நிகழ்ந்தது. அரசாங்கம் இந்தக் கொடூரத்தை வேடிக்கை பார்க்கலாமா..? என எதிர்க்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கேள்விகள் எழுப்ப மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில் விடுவதாக அறிவித்தது.
அந்த அடிப்படையில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாநிலத்திலிருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 20,000 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் பல்வேறு கட்டங்களாகச் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு குடிநீர் பிஸ்கட் பாக்கெட் போன்றவையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 05.06.202 வெள்ளிக்கிழமை மாலை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்கின்றனர். இதற்காக அவர்கள் அனைவரும் ஈரோடு மாநகராட்சி மண்டபம் வந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாலை சிறப்பு ரயில்கள் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்திலிருந்து பீகார், ஒடிசா, குஜராத், உ,பி., ராஜஸ்தான், மேற்கு வங்கம் என இதுவரை சுமார் மூன்று லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் சில லட்சம் பேர் சொந்த ஊர் செல்ல காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதார் கார்டு, டிஜிட்டல் கார்டு என ஒரே கார்டுக்குள் இந்திய மக்களை இணைக்கலாம் ஆனால்... உழைப்பு, வருவாய், உணவு, பசி, வறுமை, இருப்பிடம் இவையெல்லாம் ஒரே கார்டில் மக்களை இணைக்க முடியாது பிறந்த மண் எதுவோ அதுவே தங்களின் வாழ்வியல் நம்பிக்கை என்பதை மக்களுக்கு கரோனா உனர்த்தியுள்ளது.