சேலம் அருகே, நில வழித்தட பிரச்னையில் கூடப்பிறந்த தம்பியையே எஃப். எம். ரேடியோவில் வெடிகுண்டு வைத்துத் திட்டமிட்டு கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி (50). விவசாயி. ஜூன் 17- ஆம் தேதியன்று, தன் வீடு அருகே தோட்ட வழித்தடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றைக் கண்டெடுத்தார். வீட்டிற்கு எடுத்துச் சென்று அதில் உள்ள மின் வயர்களை சுவிட்ச் போர்டில் சொருகியபோது, திடீரென்று எஃப்.எம் ரேடியோ பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில், விவசாயி மணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய முகமும், ஒரு கையும் சிதைந்தன. சம்பவத்தின் போது வீட்டில் இருந்த அவருடைய பேத்தி சவ்ரூபியா (10), உறவினர்கள் நடேசன் (65), வசந்தகுமார் (37) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மணியின் வீட்டில் வெடித்தது என்ன வகையான பொருள் என்றோ, அச்சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என சம்பவத்தன்று காவல்துறையால் எந்த ஒரு யூகத்துக்கும் வர முடியவில்லை.
சம்பவ இடத்தில் இருந்து டெட்டனேட்டர், ஜெலட்டின் ஸ்டிக்ஸ் உள்ளிட்ட பொருள்களின் சிறு துகள்களை தடயவியல் நிபுணர்கள் கண்டெடுத்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் அதை ஊர்ஜிதம் செய்தனர். இதையடுத்தே காவல்துறையினர், மர்ம நபர்கள் திட்டமிட்டு வெடி வைத்து மணியைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதுகுறித்து விசாரிக்க, சேலம் மாவட்ட எஸ்.பி., தீபா கனிகர் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. உமா சங்கர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் அம்சவள்ளி, ஆனந்தன், குலசேகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையுண்ட மணிக்கும், அவருடைய அண்ணன் செங்கோடன் (64) என்பவருக்கும் தோட்டத்திற்குச் செல்லும் வழித்தடம் தொடர்பாக உரசல் இருந்து வந்த விவகாரம், காவல்துறைக்குத் தெரிய வந்தது. மணியை டார்கெட் செய்யக்கூடியவர்கள் யார் யார்? வேறு என்னென்ன மோட்டிவ்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறைக்கு எதிலும் திடமான தடயங்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் செங்கோடனை அழைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதற்கு அடுத்த நாள் அவர், வீடு அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரிடம் மீண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, தன்னுடைய விவசாய நிலத்திற்குச் செல்வதற்கு மணியின் நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர் வழித்தடத்திற்கு நிலத்தை விட்டுத்தர மாட்டேன் என்று சொன்னதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் தம்பி என்றும் பாராமல் கொலை செய்து விட்டதாகக்கூறி தேம்பித்தேம்பி அழுதார்.
கொலையான மணிக்கு செங்கோடன் உள்பட மொத்தம் மூன்று சகோதரர்கள். நான்கு பேரும் தலா 3 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். இவர்களின் நிலத்துக்குள் செல்ல வழித்தடம் இல்லாததால், பக்கத்துக் காட்டுக்காரர் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் கொடுத்து வழித்தட போக்குவரத்திற்காக நிலத்தை வாங்கியுள்ளனர். செங்கோடன் தவிர மற்ற மூவரும் வழித்தட நிலத்திற்கான பங்குத்தொகையைக் கொடுத்துவிட்டனர். செங்கோடன், வழித்தட கிரயத்துக்கான தொகையைத் தர முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
இதனால் மணி, தாங்கள் வாங்கிய நிலத்தின் வழித்தடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று செங்கோடனுக்குத் தடை விதித்தார். இதையடுத்து அவரும், இன்னொருவரின் நிலத்தின் வழியாக தன் நிலத்துக்குச் சென்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த நிலத்துக்காரருடனும் செங்கோடனுக்கு பிரச்சினை ஏற்பட்டதால் அந்த வழித்தடத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கோடன், ஏற்கனவே வாங்கிய வழித்தடத்தில் தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்குரிய செலவுத்தொகையை தற்போது தர தயாராக இருக்கிறேன் என்றும் மணியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மணி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மணியை கொலை செய்யத் திட்டமிட்டு, கடந்த ஒரு மாதமாக அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இதற்காக கிணறு தோண்ட வெடி வைக்க வேண்டும் என்று கூறி, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு வெடிமருந்து கடையில் இருந்து டெட்டனேட்டர்களையும், ஜெலட்டின் குச்சிகளையும் வாங்கி வந்துள்ளார். அதன்பிறகு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து புதிதாக ஒரு எஃப்.எம். ரேடியோ வாங்கியிருக்கிறார்.
செங்கோடனுக்கு கொஞ்சம் எலக்ட்ரிகல் வேலைகள் தெரியும் என்பதால், எஃப்.எம். ரேடியோ பெட்டிக்குள் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளைப் பொருத்தி, அதை மின்சார வயருடன் இணைப்புக் கொடுத்திருந்தார். சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருகினால் வெடித்து விடும் வகையில் வேலைகளைக் கனகச்சிதமாகச் செய்திருந்தார்.
மணிக்கு அவ்வப்போது மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், அந்த வீக்னஸையும் தன் திட்டத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் செங்கோடன். ஒரு பையில் வெடிகுண்டுடன் கூடிய எஃப்.எம் ரேடியோ, அத்துடன் ஒரு குவார்ட்டர் மது பாட்டில், சைடு டிஷ் ஆக மிக்சர் பொட்டலம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு, மணி அன்றாடம் தோட்டத்துக்குச் செல்லும் வழித்தடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
இந்த சூழ்ச்சிகளை அறியாத மணி, அந்த ரேடியோவை எடுத்துச்சென்று சுவிட்ச் போர்டில் சொருக, வெடித்துச்சிதறி பலியாகியிருக்கிறார். செங்கோடன் எல்லாவற்றையும் திட்டமிட்டு தெள்ளத்தெளிவாக கொலையை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து செங்கோடனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு டெட்டனேட்டர் சப்ளை செய்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர், மணி கொலையுண்ட மறுநாளில் இருந்தே தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.
நில வழித்தட பிரச்னையில், தம்பியையே திட்டமிட்டு வெடிகுண்டு வைத்து அண்ணன் கொலை செய்த சம்பவம் பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.