கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கல்வராயன் மலை - துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் இருந்துவரும் வெள்ளாறு திருவாலந்துறை என்ற இடத்தில் ஒன்று கூடுகிறது. இந்த ஆற்றில் தொழுதூர் அருகே குறுக்கே அணை கட்டப்பட்டு, அந்த அணையின் வடபகுதி கால்வாய் மூலம் திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல் அணையின் தென் பகுதியில் உள்ள கால்வாய் மூலம் ஒகளுர், அத்தியூர், அகரம் சீகூர் ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போதைய மழை காரணமாக தொழுதூர் அணைக்கட்டிலிருந்து மேற்படி ஏரிகளுக்குச் செல்லும் தண்ணீரால் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் இருந்தும், திருச்சி மாவட்டம் பச்சமலையிலிருந்தும் மழை வெள்ளம் அதிகரித்து வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. அதன் காரணமாக இன்று தொழுதூர் அணைக்கட்டிலிருந்து 1,630 கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றைக் கடந்து பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அங்கிருந்து திட்டக்குடி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி வழியாகச் சென்று சேத்தியாதோப்பு கடந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. எனவே வரலாற்றில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பெருகும், கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது, விவசாயம் செழிக்கும் என்று கூறுகின்றனர். சமீப மழை காரணமாக ஆறுகளிலும், ஏரிகளிலும் தடுமாறியும், குளிப்பதற்காக இறங்கியும் எதிர்பாராமல் இறக்கும் மனிதர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் அரசு அதிகாரிகள்.