தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவித்தது. லட்சக் கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு தேதி அறிவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கல்வியாண்டிற்கான பள்ளிகள் தொடங்கியதும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஒரு கல்வியாண்டிற்காக முற்றிலும் தற்காலிகமாக அந்தந்த எஸ்.எம்.சி மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 9 ஆண்டுகளாக வேலை இல்லாமல் காத்திருக்கும் எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரகம் முன்பு தொடர்ந்து 3 நாட்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். மற்றொரு பக்கம் தற்போதைய தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் தவறுகளுக்கு வழிவகுக்கும். அதனால் அதனை நிறுத்திவிட்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தையும் நாடினார்கள். வழிகாட்டு நெறிமுறைகளில் குழப்பம் இருப்பதால் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 1ம் தேதி மீண்டும் ஒரு வழிகாட்டு செயல்முறையை வெளியிட்டுள்ள கல்வித்துறை, 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை அந்தந்த கல்வி மாவட்ட அலுவலகத்தில் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் கொடுக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை, இவர்களுக்கு பக்கத்து கிராமம் அல்லது அருகாமை ஒன்றியம், மாவட்டத்திலும் பணி வழங்கப்படும். இதற்காக நேர்காணல், பாடம் நடத்தும் முறைகள் பார்த்து தேர்வு என்றெல்லாம் செயல்முறைகள் கொடுக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை புதுக்கோட்டை உள்பட பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் இடம் பெறவில்லை. ஆனால் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை பார்த்த அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இன்று காலை முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பதாரர்கள் குவிந்துள்ளனர். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்ட அலுவகங்களிலும் விண்ணப்பங்கள் பெறவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் எங்களிடம் விண்ணப்பம் வாங்க சொல்லவில்லை என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். மாவட்டம் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பம் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து திரும்பிய மறமடக்கியைச் சேர்ந்த ஒரு விண்ணப்பதாரர் நம்மிடம், “டெட் பாஸ் பண்ணியவர்களுக்கு முன்னுரிமை என்றார்கள். நானும் வந்தேன். காலையிலிருந்து காத்திருந்தோம் விண்ணப்பம் வாங்கச் சொல்லலனு சொல்லி திருப்பி அனுப்புறாங்க. இப்படியே நிறைய பேர் திரும்பி போறாங்க. விண்ணப்பம் வாங்க வேண்டாம் என்றால் இதை கடந்த 3 நாட்களில் அறிவித்திருந்தால் நாங்கள் அலைந்திருக்க வேண்டியதில்லை” என்றார் ஆதங்கத்தோடு. பள்ளி கல்வி துறை சரியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.