விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்கச்சி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயில் பக்கத்தில், காட்டாற்று ஒன்று ஓடுகிறது. சுற்றுலாத் தளமான இந்த இடத்தில், விடுமுறை நாட்களில் பொதுமக்கள் ஏராளமானோர், அந்த கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஆற்றில் குளிப்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததன் பேரில், கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனையடுத்து, அந்த ஆற்றில் மக்கள் குளித்துக்கொண்டிருந்தனர். இதற்கிடையே, இன்று மாலை நேரத்தில் அந்த பகுதியில் கனமழை பொழிந்தது. இதனால், அந்த காட்டாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்று முனைப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி பக்கத்தில் இருக்கக்கூடிய கோயிலுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.
ஆனால், மீன்கொத்திப்பாறை என்ற பகுதியில் குளித்துக்கொண்டிருந்த சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டவர்கள், ஆற்றின் மறுகரையில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அந்த ஆற்றை கடந்து நீந்திச் சென்று கயிற்றை கட்டி ஆற்றில் சிக்கிக்கொண்ட அனைவரையும் மீட்டனர்.