தமிழக ஆறுகளில் மணல் எடுப்பதை தடை செய்துள்ளது உயர்நீதிமன்றம். அப்படியிருந்தும் பல இடங்களில் மறைமுகமாக மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் மணல் மாபியாக்கள். பாலாற்றில் இருந்தும் ஆளும் கட்சி பிரமுகர்கள் மறைமுகமாக மணல் கடத்துகின்றனர். கடந்த வாரம் ஆம்பூர் அருகே பாலாற்றில் புதியதாக சட்டவிரோதமாக ஒரு குவாரி அமைத்து மாதனூர் அதிமுக ஒன்றிய செயலாளரும், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜோதிராமலிங்கராஜாவின் டிப்பர் லாரிகள் மணல் கடத்தலில் ஈடுப்பட்டனர். அப்போது பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் என்றால் இருசக்கர வாகனங்கள் மூலமாக பாலாறு செல்லும் வாணியம்பாடி. ஆம்பூர், பள்ளிக்கொண்டா, வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதிகளில், அந்தந்த பகுதிகளின் சிறுச்சிறு மணல் மாபியாக்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் சிமெண்ட் பைகளில் மணல் திருடி வந்து ஒரு இடத்தில் சேமித்து பின்னர் அதனை லாரிகளில் ஏற்றிச்சென்று விற்பனை செய்கின்றனர். இது பற்றி பல சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் பெரியதாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், ஜூலை 23- ஆம் தேதி காலை வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் என்கிற பகுதியில் பாலாற்றில் இருந்து இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துகிறார்கள் என்ற தகவல் வாணியம்பாடி தாசில்தார் முருகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்று மணல் திருடியவர்களை மடக்கியதாக கூறப்படுகிறது. தகவல் கேள்விப்பட்டு செய்தியாளர்களும் அங்கு சென்றுள்ளனர். மணல் திருடியவர்கள் தப்பி விட்டதாக கூறிய அதிகாரிகள். சிமெண்ட் பைகளில் இருந்த மணலை ஒரு இடத்தில் சேர்த்து அதை தீ வைத்து எரித்து விட்டு சென்றுள்ளனர். இதனைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சிரித்துள்ளனர். மணலை எரிக்க முடியும்மா? இதுக்கூட தெரியாதவங்க அதிகாரிகளா இருக்காங்க என சொல்லி சிரித்தபடி சென்றனர்.