2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
மஞ்சுவிரட்டு, வட மாடு, ஜல்லிக்கட்டு என தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பொங்கல் விழாவை ஒட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் 2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் அமைந்துள்ள பிரசித்தி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்று வருகிறது.
போட்டியை அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 750 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தநிலையில் போட்டி தொடங்கிய அடுத்த கணமே மேடையில் மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அடையாள அட்டை இன்றி சிலர் மேடையில் ஏறியதற்கு விழாக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உடனடியாக மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.