தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (14/08/2021) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். டெல்லியில் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கையாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் அதனுடைய தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், நீர்வள ஆதாரம், ஊரக வளர்ச்சி, உணவு, கூட்டுறவு, வருவாய், வனம், பட்டுவளர்ச்சித்துறை ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த பட்ஜெட். ரூபாய் 34,220 கோடியே 64 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட் தாக்கல் செய்து உரையாயற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழக முதலமைச்சர், அடுத்த 10 ஆண்டுகளில் 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வர வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டத்தினை செயல்படுத்த 36 மாவட்டங்களில் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 19.31 ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண்மையை விரிவுபடுத்துவதற்கான அடுத்த நம்பிக்கை தரிசு நிலங்களே. தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கிச் சாகுபடி பரப்பு உயர்த்தப்படும். 2021- 22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 2,500 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.