சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நேற்று ஒரு பள்ளி பேருந்து லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் வேப்பூர் போலீசாருக்கு தெரியவந்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
பின் போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இந்த நிலையில், திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் பகுதியில் பள்ளி பேருந்து ஒன்று நின்றிருந்தது அதனை கடத்தி வந்தேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
முன்னதாக ஒரு தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களை கோழியூரில் பிள்ளைகளை இறக்கி விட்டுவிட்டு அந்த வாகனத்தை வழக்கம்போல் நிறுத்தி விட்டு இரவு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின் சனிக்கிழமை காலை வழக்கம் போல் வாகனத்தை எடுக்க வந்தபோது அங்கு வாகனம் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில், அந்த பேருந்து நேற்று விபத்துக்குள்ளாகி போலீஸார் அதனை மீட்டுள்ளனர்.
பிடிபட்ட அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், விருத்தாசலம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த அருணாச்சலம்(23) என்பதும், அவர் போதையில் சாலை வழியே நடந்து வரும்போது கோழியூர் அருகே நின்றிருந்த தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். போலீஸார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.