தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1961- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19- ஆம் தேதி அன்று பிறந்த விவேகானந்தன் சினிமாவில் தனது பெயரை விவேக் என சுருக்கிக் கொண்டு நடித்து மக்களை மகிழ்வித்து வந்தார். கடந்த 1987- ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக்.
சினிமாவில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும், மக்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் நகைச்சுவை கலந்த வசனங்களையும் பேசி ரசிக்க வைத்தார். சமூக கருத்துக்களை காமெடி மூலமாக பரப்பிய கருத்து கந்தசாமியாக மாறிய விவேக்கை மக்கள் சின்ன கலைவாணர் என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். நடிகர் விவேக்கின் திறமையான நடிப்பு மற்றும் சமூக சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
நடிகர் விவேக் தனது வாழ்நாள் முழுவதும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கொள்கைகளையும், விவேகானந்தரின் கொள்கைகளையும் கடைபிடித்து வாழ்ந்தார். பல லட்ச மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீர் மரணம் அடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவேக் மறைவுக்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகி இருந்த அரண்மனை 3 படம் வெளியானது.
இந்நிலையில், இன்று நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திரை பிரபலங்களும், ரசிகர்களும் சின்னக் கலைவாணருக்கு மரக்கன்றுகளை நட்டும், அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.