தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில், கரோனா விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல், விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்தல் மற்றும் அவர்களை சட்டப்படி தண்டிப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
இன்று மாலை இந்த அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இந்தப் புதிய அவசரச் சட்டத்தின் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம். பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம். கரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.